vendredi 24 novembre 2017

செல்லமடி நீயெனக்கு!

செல்லமடி நீயெனக்கு!

1.
பாடுதடி என்னெஞ்சம்! பாவையுன் நல்வரவால்
கூடுதடி இன்பம் கொழித்து!

2.
ஏங்குதடி உள்ளம்! இளமைக் கவிபாடித்
தாங்குதடி கன்னல் தமிழ்!

3.
கொஞ்சுதடி மாங்கிளிகள்! கோதையுன் பேரழகு
விஞ்சுதடி கண்முன் விரிந்து!

4.
மின்னுதடி எண்ணங்கள்! வெல்லும் விழியிரண்டும்
பின்னுதடி என்னைப் பிடித்து!

5.
நாடுதடி உன்னருளை! நாளும் உறவாடிச்
சூடுதடி காதல் சுவை!

6.
சேருதடி ஆசையலை! சித்திரமே! பொற்கனவு
ஊருதடி என்னுள் ஒளிர்ந்து!

7.
பருகுதடி பார்வை! உருகுதடி உள்ளம்!
பெருகுதடி காதலெனும் பித்து!

8.
மணக்குதடி மல்லி! மயக்குதடி மாலை!
கணக்குதடி மேனி கனத்து!

9.
பூக்குதடி பொற்சோலை! உன்னுடைய புன்னகை
ஆக்குதடி அன்பாம் அமுது!  

10.
செல்லமடி நீயெனக்கு! செல்வமடி நீயெனக்கு!
பல்குமடி இன்பம் படர்ந்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.11.2017

samedi 18 novembre 2017

பஞ்சபங்கி
ஒன்றில் ஐந்து
[பஞ்சபங்கி]

பஞ்சபங்கியென்பது, ஒரு பாடலை இலக்கண முறைப்படி 5 பாடல் வரும்படி அமைப்பதாம்.

ஒரு நேரிசையாசிரியப்பாவில் 1. கட்டளைக்கலித்துறை, 2. கலிவிருத்தம், 3. குறள் வெண்பா, 4. நேரிசை வெண்பா, 5. குறளடி வஞ்சிப்பா வரும்படி அமைந்திருப்பதைக் கண்டு களிப்பீர்.

என்னவள்!

நேரிசையாசிரியப்பா
கலைமணம் வீசும் கனிந்த தமிழைத்
தலைத ரித்தாள்! நிலைமனம் தாங்கி
அலைவளம் ஏந்தி நிறைய ளித்தாள்!
மலைவளம் கொண்ட மலருளம் கண்ட
மதிமு கத்தாள்! சிலையென வந்தாள்
நதிந லத்தாள்! இந்நாள்சீர் உறுமே!
கண்கள் இரண்டும் கவிகள் வழங்கும்
பெண்கள் பேசும் பெருமை முழங்கும்!
பண்கள் பிறந்து பசுமை படைக்கும்!
தண்..கள் மொழியாள்! தமிழின் இனியாள்!
மூக்கு வடிவெழில் மூளையை நன்றாகக்
தாக்கும் துயரினைத் தந்து, வண்ண
இதழ்கள் வழங்கும் இனிமையால் எண்ணம்
நதியாய் எழுந்தாடும்! நண்ணும் நலமே!
நடையோ நடனம் தருமே! வளமே
படைப்பாள் மகிழ்ந்து!  பாடு மனமே
இன்ப எழிலை! சூடு மனமே
அன்பின் அணியை! ஆடு மனமே
அமுத மனமே! காடு மணமே
கமழும் அழகை, கன்னல் அழகை,
கவிதை யழகை, கன்னி அழகை,
புவியோர் போற்றக் காதல் நல்கும்
என்பேன்! நாளும் இனிமை பல்கும்
என்பேன்! பசுமை யாவும் படர்ந்து
சுடரும் என்பேன்! சுவைச்சீர்
தொடரும் என்பேன் தோகை விரித்தே!

கட்டளைக் கலித்துறை

கலைமணம் வீசும் கனிந்த தமிழைத் தலைதரித்தாள்!
நிலைமனம் தாங்கி அலைவளம் ஏந்தி நிறையளித்தாள்!
மலைவளம் கொண்ட மலருளம் கண்ட மதிமுகத்தாள்!
சிலையென வந்தாள் நதிநலத் தாள்!இந்நாள் சீர்பெறுமே!

கலிவிருத்தம்

கண்கள் இரண்டும் கவிகள் வழங்கும்!
பெண்கள் பேசும் பெருமை முழங்கும்!
பண்கள் பிறந்து பசுமை படைக்கும்!
தண்..கள் மொழியாள்! தமிழின் இனியாள்!

குறள் வெண்பா

மூக்கு வடிவெழில் மூளையை நன்றாகக்
தாக்கும் துயரினைத் தந்து,

நேரிசை வெண்பா

வண்ண இதழ்கள் வழங்கும் இனிமையால்
எண்ணம் நதியாய் எழுந்தாடும்! - நண்ணும்
நலமே! நடையோ நடனம் தருமே!
வளமே படைப்பாள் மகிழ்ந்து!

வஞ்சிப்பா

பாடுமனமே இன்பவெழிலை!
சூடுமனமே அன்பினணியை!
ஆடுமனமே! அமுதமனமே!
காடுமணமே கமழுமழகைக்
கன்னலழகை, கவிதையழகை,
கன்னியழகை, புவியோர்போற்றக்
காதல்
நல்கும் என்பேன்! நாளும் இனிமை
பல்கும் என்பேன்! பசுமை யாவும்
படர்ந்து சுடரும் என்பேன்! சுவைச்சீர்
தொடரும் என்பேன் தோகை விரித்தே!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
18.11.2017


vendredi 10 novembre 2017

சித்திர கவிதை


சித்திர கவிதை
பசுவின் பாய்ச்சல் [கோமுத்திரி]
 
கலிவிருத்தம்
 
வான்மழை இன்பம்! வளமுறு புவிகாக்கும்!
மான்விழி இன்பம்! மனமுறு சீர்காக்கும்!
கான்கழை இன்பம்! உளமுறு கவிகாக்கும்!
தேன்மொழி இன்பம்! தினமுறு தார்காக்கும்!
 
விளக்கம்
 
பசு மாடு நடந்துகொண்டே மூத்திரம் பெய்ய உண்டாகும் சுவட்டின் வடிவாக அமைக்கப்பட்ட கோடுகளில் எழுத்துக்கள் அமையப் பாடிய பாட்டுக் கோமுத்திரியாகும். [கோ - பசு] [மூத்திரம் - சிறுநீர்]
 
நான்கடிப் பாடலை இரண்டு அடியாக எழுதி, மேலும் கீழுமாக ஓரெழுத்து இடையிட்டுப் படிக்க அப்பாடலே வந்தமையும்
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
03.11.2017

பிறிதுபடுபாட்டு

பிறிதுபடுபாட்டென்பது ஒரு பாட்டை வேறுபாட்டாக இலக்கணப்படி அமைப்பதாம்.
 
ஆசிரியப்பா
 
கன்னல் சுவையே! கமழும் கவிமலர்
இன்ப ளிப்பாய்! இன்னல் துடைப்பாய்!என்
அன்பே! அமுதே! இசைய ளிப்பாய்!
நன்றே எனக்கு நறுந்தமிழ் நல்கும்
நலம ளிப்பாய்! பொன்னே! நயக்கும்
வளம ளிப்பாய்! வண்ணப்பூங் கொடியே!
 
கட்டளைக் கலித்துறை
 
கன்னல் சுவையே! கமழும் கவிமலர் இன்பளிப்பாய்!
இன்னல் துடைப்பாய்!என் அன்பே! அமுதே! இசையளிப்பாய்!
நன்றே எனக்கு நறுந்தமிழ் நல்கும் நலமளிப்பாய்!
பொன்னே! நயக்கும் வளமளிப் பாய்!வண்ணப் பூங்கொடியே!
 
[ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறையாக வருவது காண்க]
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்.
10.11.2017

lundi 30 octobre 2017

குற்றெழுத்து விருத்தம்

குற்றெழுத்து விருத்தம்
 
1.
கனிநல முடையது! கவிநல முடையது!
நனிநல முடையது! நறுமண முடையது!
பனிநல முடையது! படரெழில் உடையது!
தனிநல முடையது! தமிழெனும் ஒளிமொழி!
 
2.
கலையெழில் உடையது! கவரெழில் உடையது!
அலையெழில் உடையது! அணியெழில் உடையது!
மலையெழில் உடையது! மணியெழில் உடையது!
சிலையெழில் உடையது! செழுதமிழ் ஒளிமொழி!
 
3.
மதிநல முடையது! மறைநல முடையது!
நதிநல முடையது! நடுநிலை யுடையது!
துதிநல முடையது! சுதிநல முடையது!
ததிநல முடையது! தமிழெனும் ஒளிமொழி!
 
4.
அருளொளி யுடையது! அறிவொளி யுடையது!
பொருளொளி யுடையது! புகழொளி யுடையது!
திருவொளி யுடையது! திணையொளி யுடையது!
குருவொளி தருவது! கொழிதமிழ் ஒளிமொழி!
 
5.
மறமொளி யுடையது! மலரொளி யுடையது!
அறமொளி யுடையது! அழகொளி யுடையது!
உறவொளி யுடையது! உலகொளி யுடையது!
நெறியொளி யுடையது! நிறைதமிழ் ஒளிமொழி!
 
6.
பொதுநல முடையது! புவிநல முடையது!
புதுநல முடையது! புனைநல முடையது!
மதுநல முடையது! மனநல முடையது!
முதுநல முடையது! முனிநலம் ஒளிமொழி!
 
7.
வகைவகை யுடையது! வனமெழில் உடையது!
தொகைதொகை யுடையது! துணிவினை உடையது!
பகைபகை ஒழிவுறு படைவகை யுடையது!
தகைதகை யுடையது! தமிழெனும் ஒளிமொழி!
 
8.
சுடரெழில் உடையது! சுவைபல தருவது!
படரெழில் உடையது! பயிரெழில் உடையது!
மடலெழில் உடையது! மனையெழில் உடையது!
தொடரெழில் உடையது! துணைதரும் ஒளிமொழி!
 
9.
விடியெழில் உடையது! வியனெழில் உடையது!
கொடியெழில் உடையது! குடியெழில் உடையது!
அடியெழில் உடையது! அமுதினை உடையது!
கடியெழில் உடையது! கனிவருள் ஒளிமொழி!
 
10.
கொடையெழில் உடையது! குயிலெழில் உடையது!
விடையெழில் உடையது! மிளிரெழில் உடையது!
தொடையெழில் உடையது! சுனையெழில் உடையது!
நடையெழில் உடையது! தமிழெனும் நயமொழி!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்.
30.10.2017